Tuesday, July 17, 2018

இவர் எங்கள் குடியிருப்பின் கார்ட்னர். இந்த சொல்லை ஒளிக்கும்போது கடவுள் ஒளிந்திருப்பதால் இதை ஆங்கிலப்படுத்தினேன். குடியிருப்பின் உட்புறம் சுமார் 200க்கும் மேற்பட்ட மரங்கள் செடிகள் கொடிகள் இருக்கும். இவை அனைத்தும் செழிப்புடன் ஆனந்தமாய் தூய்மையுடன் இருப்பதற்க்கு இவர்தான் முழுமுதற்காரணம். குழந்தைகளையும் மக்களையும் மட்டும் காப்பவர் மட்டுமே மருத்துவர் அல்ல. எங்கள் கார்ட்னரும்தான்

ரயில் பயணம் ஒன்று: 

எப்போதும் களிமண் கலரிலேயே பார்திருந்து, முதன் முதலில் வைகை ரயில் வேற்று கலரில் பார்த்தபோது அவ்வளவு ஆனந்தம். பல வருடங்களுக்கு பிறகு சமீபத்தில் திருச்சியை நோக்கி பயணம். முன்பதிவு செய்யப்படாத நிலையில் வைகை விரைவு ரயிலில் இடம் இல்லை. முன்பதிவு செய்யப்படாத பெட்டியில் எப்படியோ சன்னலோரமாக ஒரு இடத்தை பிடித்தாகிவிட்டது. அது ஒரு சிங்கிள் சீட்டர். வண்டியில் கும்பல் நிரம்பி வழிந்த காரணத்தால் காலிலும் இடுக்கிலும் என்னுடன் பயணித்தவர்கள் உட்கார்த்திருந்தனர். பக்கத்து இருக்கையில் ஒரு நான்கு பேர் உட்கார்ந்து இருந்தனர்.

பக்கத்து இருக்கயில் புதிதாக திருமணமான தம்பதிகள் மாலை மற்றும் உடை, நாத்தனார்கள் காட்டிய காசு இவைகளிலிருந்து தெரிந்தது. பெண்ணின் தகப்பனார் ரயில்வே தொழிலாளி என் அப்பாவைப்போல் (படத்தில் உள்ளவர்). தன் பெண்ணிற்கு தனது சட்டை பயிலிருந்து பணத்தை எடுத்துகொடுத்தார். பிறகு பேண்டிலிருந்து பணம் தரப்பட்டது. பெண்ணிற்கு என்ன வேண்டும் என்று கேட்டு ஏதோ உணவு பொருட்கள் வாங்கி வந்தார்.

அந்தப்பெண், ‘அப்பா போரும்’ என்று கூறியும், மறுபடியும் தண்ணி இருக்காம்மா என்று கேட்டுக்கொண்டே தண்ணீர் பாட்டில் வாங்கி வந்தார். திருமணம் செய்து முதல் முறை அனுப்புவது அந்த பதட்டத்தில் பரிதவிப்பில் தெரிந்தது. நான், ‘எங்கே தண்ணி வாங்கி வந்தீங்க. அதிக தூரமா இல்ல கிட்டக்கதானா’ என்றேன்.

இங்கதான் என்று சொல்லி நான் மறுத்தும் கேட்காமலேயே மற்றொரு பாட்டீல் என் கையில். என்னால் அந்த கும்பலில் எல்லோரையும் தாண்டி சென்றிருக்கவும் முடியாது. பச்சை சிக்னலும் போட்டாகிவிட்டது. அவரை அனுப்பிய குற்ற உணர்வுடன் பணத்தை எடுத்து கொடுத்தேன். அவர் பரவால்ல இருக்கட்டும் என்றார். வலுக்கட்டாயமாக திணித்தாலும் இந்த நெகிழ்வான தருணம் முன்பதிவு செய்யப்பட்ட பெட்டியில் கண்டிப்பாக கிடைத்திருக்காது. இந்த மனிதரை மறுபடியும் பார்ப்பேனா என்று அறியேன். ஆனால் மனதில் பதித்து சென்ற நிகழ்ச்சி.
இடையில் ஒரு பெண் வடை மற்றும் சம்ஸா விற்று கொண்டு வர, நாக்கில் எச்சில் வர நான் கட்டிய மனைவி கட்டி அனுப்பிய பாக்ஸை திறந்து உண்ண ஆரம்பித்தேன். மனதில் சம்ஸா மறுபடியும் வருமா என்று நினைத்து கொண்டிருந்த வேளையில் சிறிது நேரம் கழித்து வர இம்முறை பாக்ஸ் மூடப்பட்டது.

வைகை ஓடி வர வசந்தம் பாடி வர மனதில் அசை போட்டுக்கொண்டே நான். தண்டவாளம் கணுக்காலில் இல்லாமல் பாதம் பட்ட காற்ச்சலங்கைபோல் கூடவர ஆடியில் வைகை வற்றினாலும் இவ்வைகை வைகறை கடந்து காவிரி வந்தடைந்தது.

PK Iyengar

வருடம் 1991. எஸ்‌எஸ்‌என் நேவல் அகாடெமி ஆபிசர் நேர்முகத்தேர்விற்கு அழைத்திருந்தார்கள். இன்டர்வியூ பயணச்செலவு திரும்ப பெற்றுக்கொள்ளலாம். புகைவண்டி பிடித்தாயிற்று. சென்ட்ரலில் இருந்து நாக்பூர் வழியாக ஏதோ ஒரு எக்ஸ்பிரஸ், பெயர் ஞாபகமில்லை. தேர்வை எதிர்நோக்கி கையில் அந்த வருட GK புத்தகத்தில் சிந்தனைகளை சிதறவிடாமல் மூழ்கினேன். 

அருகில் ஆங்கிலம் பேசக்கூடிய சிலரிடம் அவ்வப்போது ஊரு பேர் கேட்டுக்கொண்டு சந்திப்புகளில் கிடைக்கும் உணவுகளை உட்கொண்டு உட்கார்ந்திருந்தேன். நாக்பூர் வந்தடைந்ததும் வேறு சிலர் ஏறினர். இங்கு தான் நம் ஹீரோ அறிமுகமானார். சுமார் 50 வயதை கடந்தவர். பெயர் மணி என்பது மட்டும்தான் மனதில் உள்ளது. தமிழா என்று விசாரித்தார். ஆம் என்றும் இந்தியக் கடற்படையில் எஸ்.எஸ்.சி நேர்முகத்தேர்விற்கு வந்தேன் என்றும் கூறினேன். அதற்குள் என்னுடன் மற்றொருவரும் சேர்ந்து கொண்டார். எங்களை பெட்டி படுக்கயை பார்த்து, அடப்பாவி சுரேஷ், இங்க குளிர் அதிகம், ஆனால் நீ வேஷ்டியை போத்திக்கொள்வேன் என்கிறாய். பேசாமல் என்னுடன் வா. என் வீட்டில் நல்ல டூவேட் மற்றும் கம்போர்ட்டெர்ஸ் இருக்கிறது, எடுத்து செல் என்றார்.

நான் முன் பின் தெரியாதவரை எப்படி தொடர்வது என்று மனதில் பல எண்ணங்கள் தோன்றினாலும் நாளை காலை அங்கு 7 மணிக்கு சரியாக அகாடெமியில் இருக்க வேண்டும் என்று சொல்லி விடை பெற்றேன். இந்த இன்டர்வியூ பிராசஸ் ஒரு அருமையான அனுபவம். ஒரு வாரமே பேதமில்லாமல் பல மாநிலத்தவருடன் பழகும் அறிய வாய்ப்பு கிட்டும். எல்லோரும் பல வருடங்கள் பழகியது போல் நட்பு பாராட்டுவோம். Entrance exam, individual task, half group task, full group task, interview, breaks, food என்று அதற்கு தனி பத்தி எழுத வேண்டும். இவைகள் அனைத்திலும் மிளிர கடினமாக தோன்றவில்லை.

ஒருவாரம் கழித்து தேர்வு முடிந்தவுடன் ஓர் மன தையிரியத்தை வரவழைத்து மணி அவர்களை தொலைபேசியில் கூப்பிட்டேன். நான் கிளம்பறேன் சார் என்றேன். இல்ல இல்ல நீ வீட்டுக்கு வந்துதான் போகவேண்டும் என்று ஆர்‌பி‌ஐ (சார் இம்லி) காலனிக்கு ஆட்டோ பிடித்து வருமாறு அழைத்தார். வார விடுமுறை நாள் ஆதலால் பிட்டன் மார்க்கெட் எல்லாம் சென்றோம். இன்னும் இரண்டு நாள் மேலும் தங்குமாறு வற்புறுத்தினார்.

சகல வசதிகளுடன் தனி ரூம், எல்லாம் விலயுயர்ந்த பொருட்கள். பெரிய பெண் அமெரிக்காவில் ஐ‌பி‌எம் மாப்பிள்ளைக்கு வாக்கப்பட்டு சென்று விட்டார். சிறிய பெண் காலேஜில் படித்து கொண்டிருக்கிறார். அம்மாவும் பெண்ணும் கேரளாவில் உள்ளனர் என்று புகைப்படங்களை காண்பித்தார்.

அன்று பணிப்பெண் வந்து அவருக்கு வைத்திருந்த உணவை மறந்து சென்று விட்டதால் நான் ஓடோடி சென்று அழைத்து வந்ததை கண்டு, ‘பார்த்தாயா சுரேஷ், உன் வீடு போல் உனக்கு பொறுப்பு வந்துவிட்டது’ என்றார். மறுநாள் சாவியை கொடுத்துவிட்டு நான் மாலை வருகிறேன் என்று சென்று விட்டார். நம்ப முடியாதுதான். ஆனால் அத்தனையும் சத்தியமான வாக்கு. நான் உதவி செய்ய நினைத்து அரிசி வைக்கலாம் என்று குக்கரில் தண்ணீர் வைக்காமல் அரிசிக்கு மட்டும் 1:3 வீதம் தண்ணீர் வைத்து, ப்ரெஷரில் மூடி பறந்து அரிசி தீய்ந்து பாத்திரம் கருகி அவர் வரும்வரை கன்னத்தில் கை வைத்து உட்கார்ந்திருந்தேன்.

அழைப்பு மணி அடிக்கவும் என் பீட்டும் எகிறியது. திறந்தேன், சுரேஷ், பி‌கே ஐயங்காரிடமிருந்து என் சின்ன பெண்ணுக்கு வரன் கேட்டு கடிதம் வந்திருக்கிறது. இதுக்கென்னடா இவ்வளவு எக்ஸ்ஐட் ஆகிறார் என்று பார்த்தேன். அடப்பாவி, அவர் யாரென்றே தெரியாதா. செர்மேன் ஆஃப் அடாமிக் ரிசர்ச் அண்ட் கமிஷன் என்றார். ஓகே ஜி‌கே புக்ல பி‌கே இல்லை டி‌கே என்று சொல்லி கேக்கே பிக்கே ன்னு விழித்து அடுத்து அரிசி கதையை ஆரம்பித்தேன். மருபடியும் திட்டு. என் மனைவி வந்து கேட்டால் நான் என்ன சொல்வது. யார் பெற்ற பிள்ளயோ. உன் தாயிடம் நான் என்ன சொல்வேன் என்றாரே தவிர குக்கரை பற்றி அணு அளவும் கவலைப்படவில்லை. அவருக்கு அணு சம்பந்தப்பட்ட சம்பந்தம் அமைய பிரார்த்திதேன்.

மணி ஐயங்கார் மனிதருள் மாணிக்கம். பல முகமறியா மக்களுக்கு உதவியுள்ளார். அவர் எங்கு உள்ளார் என்று அணுவளவும் செய்தி இல்லை. சின்ன பெண்ணிற்கு அந்த சம்பந்தம் முடிந்ததா என்றும் தெரியாது. அசை போட்டுக்கொண்டே இருபுறமும் வானுயர டால்மேஷியன் படுத்திருப்பது போல் பனிபடர்ந்த மலைகள் நடுவில் சீரிச்செல்லும் வண்டி சக்கரத்தின் ஓசையுடன் வாழ்க்கை சக்கரத்தின் மாற்றங்களை எண்ணி காவிரி நோக்கி பயணித்தேன்.