Tuesday, July 17, 2018

நம்மில் ஒவ்வொருவரும் தன் அப்பாவுடன் அதிகம் டிராவல் செய்திருப்போம். ஆனால் எனக்கு ஏனோ அது மிகச்சில நாட்களே கிடைத்தது. காரணம் அவர் வேலை வேலை என்று ஓடிக்கொண்டிருந்தார். எர்னாக்குளம், குண்டக்கல், கிறிஷ்ணராஜபுரம் என்று பல மாநிலம் பல வருடங்கள் வாரநாட்களில் அவர் வேலை செய்து சனி ஞாயிறு மட்டும் வீட்டுக்கு வருவார். அதிலும் நடுவில் ஐந்து வருடங்கள் வருடத்திற்கு 30 நாட்கள் மட்டும் பார்க்க முடிந்தது. ரயில்வே வேலையில் 1985ல் சம்பளம் 450 மட்டுமே. குடும்பம் ஐந்து குழந்தைகள் என்று சிரமம். தாத்தா இந்திய அளவில் கால்பந்துக்கோப்பை விளையாட்டு திருச்சி அண்ணா ஸ்டேடியத்தில் பண்ண முயற்சித்து பணம் இழந்துவிட்டதும் ஒரு காரணமாக இருக்கும். அப்பா அவராக முன்னேற வேண்டிய சூழல் ஒரு டிரங்க் பெட்டியில் தொடங்கியது. வீட்டிலேயே கிலோத்ஸ் பாண்ட், ஷர்ட், சாரீ பிஸினஸ் செய்தார்.

ஒன்பதாவது படிக்கும் போது வகுப்பிலேயே சின்ன பையன். உயர வரிசையில் நிற்கவைத்தால் நான் தான் முதலில் நிற்பேன். அந்த நேரத்தில் அமைந்ததுதான் நானும் என் அப்பாவும் செய்த இந்த இனிமையான பயணம். ஐ மிஸ் ஹிம். கீதை மற்றும் வேறொரு புத்தகமும் எடுத்து வைத்துக்கொண்டேன். பயணத்தில் தாதர் எக்ஸ்பிரஸ் போகும்போது முன்பதிவு செய்யாமல் இங்குள்ள போர்டரிடம் பணம் கொடுத்து பெர்த் பெற்றாலும் வடநாட்டில் இருக்கையை இழக்க நேரிடும். இல்லை என்றால் சலோ சலோ என்று அடிப்பார்கள். அவர்கள் 4.30 மணிக்கு எழுந்து வண்டி பிடித்து 3 மணிநேரம் சென்று பம்பாயில் வேலை செய்வார்கள். அதுவும் கடினம்தான். உட்கார்ந்து தூங்கி கொண்டே செல்வார்கள். முன்பதிவு செய்தால் ரயில்வே பாஸ் கையெழுத்து ஆகிவிடும். மறுபடி உபயோகிக்க முடியாது. எங்கள் இலக்கு பம்பாய் சூரத் ஆமதாபாத் மூன்று இடத்திலும் சென்று துணிகள் வாங்கி வர வேண்டும். வெளிநாட்டு விமானத்தில் பயணம் செய்யும் போது எடுத்துச்செல்லும் பெரிய 2 பெட்டியை நிறப்பி, மற்றும் எங்கள் உடைக்கான ஒரு சிறிய பெட்டியையும் எடுத்து வருவோம்.

போகும்போது ஜங்ஷனில் 15 நிமிடம் நிற்கும்போது மதியம் உணவு ஒருவர் 7 நிமிடம் என்று ஓடிச்சென்று இருவரும் சாப்பிட்டு வருவோம். வண்டி கிளம்பிவிட்டால் மொழியும் தேரியாத இடத்தில் என்ன செய்வது என்று எனக்கு திக் திக் என்று இருக்கும்.
சூரத்தில் சாரீ மார்கெட்டுக்கு நடந்தே கூட்டிச்செல்வார். ஒரு சாரீயில் 10 ரூபாய் அதிகமாக வைத்தால் ஆட்டோவீல் போக 3ரூ வார 3ரூ என்று சரியாகிவிடுமே என்று சொன்னாலும் கேட்க மாட்டார். திருச்சி சாரதாஸை விட குறைவாக விற்கவேண்டும் என்பார். அதை விட பெரிய அளவில் வர எண்ணம். ஆனால் தான் கடன் பெற்ற பணத்தில் வாங்கிய துணிகளை தம்பியிடம் கொடுத்து விற்கச்சொல்லி பிசினஸ் லாஸ் ஆகியது ஒரு தனி கதை.

பம்பாயில் பாண்ட் மற்றும் ஷர்ட் பிட்ஸ் வாங்கிவிட்டு ரயில் ஏற வந்தோம். என் தலையில் ஒரு பெரிய சூட்கேஸ், அப்பாவின் தலையில் எங்கள் இருவரின் துணிமணியும் சேர்த்து இரண்டு சூட்கேஸ் மற்றும் கையில் இரு மஞ்சப்பையில் துணி, நேரமின்மையால் அவசரமாக ரயில் நிலையம் ஓடி வந்தோம். அப்போது தாதர் ரயில் நிலையத்தில் ஒரு ரயில்வே காவல் அதிகாரி எங்களை நிறுத்தினார். பெட்டில என்ன என்று ஹிந்தியில் கேட்டார். அப்பா, நான் ஒரு ரயில்வே ஸ்டாஃப் சார். இதுமாதிரி பிசினஸ் நிமித்தமாக வாங்கி செல்கிறேன் என்றார். ரயில் வந்து விட்டது. அவர் பெட்டியை திறக்கச்சொன்னார். அப்பா ரயில் வந்திருச்சு சார் என்று கெஞ்சியும் அவர் திறக்கச்சொல்லி இரு பெட்டியையும் பார்த்தார். வண்டி புறப்பட்டவுடன் எங்களை போகச்சொன்னார். அன்ரிசர்வ்ட் பெட்டி சென்றுவிட்டது. நாங்கள் தலையில் பெட்டியுடன் ஓடினோம். என் தலயில் இருந்த பெட்டி மெல்ல மெல்ல நழுவி என் முதுகில் அமர்ந்தது. அந்த வயதில் அது அதிக வலுவாக தெரிந்தது. அப்பா ஓடிக்கொண்டே ஒவ்வொரு ரிசர்வ்ட் பெட்டியிலும் ஏற முயன்றார். கதவு மூடப்பட்டது. நான் பின்னே ஓடி வருகிறேன். ஏமாற்றமும் வெறுப்பும் அதிகமானது. ஒரு டி‌டி‌ஆர் ஏறுங்க அடுத்த ஸ்டேஷனில் இறங்கி மாறிக்கோங்க என்றார். அப்பா அவர் வைத்திருந்ததை உள்ளே தூக்கிப்போட்டு ரயிலில் ஏறி என் பெட்டியை வாங்கி உள்வைத்து, ஓடி வந்த என்னையும் கைப்பிடித்தார். அந்த பிடியின் அழுத்தமும் அவர் கண்களின் ஈரமும் டி‌டி‌ஆரின் உள்ளுக்குள் ஈரமும் என் மனதை என்னவோ செய்தது. அந்த டி‌டி‌ஆரின் முகம், பெயர் தெரியாது. இருந்தும் அவர் குடும்பம் பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன். லைஃப் இஸ் ஃபுல் ஆஃப் அட்வெண்ட்சர்ஸ் என்று நினைத்து சன்னலில் கம்பியில் சாய்ந்து வெளியில் கண்ட மின்சார கம்பி அனைத்தும் விலகியும் தறி நெய்வது போல் அதே சத்ததுடன் கூட வருவதை பார்த்து தறி கேட்டு ஓடிய தாதரில் காவிரியை காண ஆவலாய் அமர்ந்து இருந்தேன்.

கயல் கதையல்ல

காய்ந்த சருகுகலுனூடே சிறிய சலசலப்பு. தெருவிளக்கு ஆறுமணிக்கு போடுவது சில நிமிடங்கள் தள்ளி போகிய நாள். இருளப்போகும் போகும் நேரத்தில் தான் அஞ்சு அவளை கண்டாள். சற்றே சருகுகளை விளக்கி பார்த்தால் அழகாக முனகலுடன் இருப்பதை பார்த்து விட்டுபோக மனமில்லை. ஆனால் ஹாஸ்டலில் தன் கூட தங்க வைக்க பயம். வார்டனிடம் சொல்லி சமாளிக்கலாம் என்று அஞ்சு அரவணைத்ததாள்.
அஞ்சு விலங்குகள் பறவைகள் மீது அதிக பாசம் வைத்திருப்பவள். வீட்டிற்கு செல்லும் வழியில் பாக்பைப்பர் கதையில் எலிகள் வருவது போல் தெருவில் உள்ள நாய்கள் கூடவே வரும். சிலவாரங்களுக்கு முன் தனியாக ஒரு குட்டிநாய் தெருவில் இருந்ததால் வீட்டிற்கு தூக்கி கொண்டு வந்தேவிட்டாள். இது எப்போதும் நடப்பதுதான் என்பது போல் பெற்றோர். அதற்கு ஓரியோ என்று பெயரிட்டு கொச்சினில் உள்ள தன் வீட்டில் தங்க வைத்துவிட்டாள்.
ஒரியோவுடன் ஓரிரு வாரம் இருக்கத்தான் கொச்சின் பயணமானாள். ஆனால் விடுதியில் தன்னுடனான கயல். கயல் கயல்விழி கொண்டவள். கயல் தனியாக இருப்பது அவ்வளவு சுலபமல்ல என்பதை அன்றுணர்ந்தாள். விடுதியில் வில்லனாக காவலாளி என்று இந்த தனிமை கிடைக்கும் என்று இருந்திருப்பான் போலும்.
அஞ்சு ஆனந்தத்துடன் திரும்பினாள். கல்லூரி விடுதியின் கதவை திறந்ததுதான் தாமதம். அழுகையை அவளால் அடக்கமுடியவில்லை. பதைபதைப்புடன் அந்த காவலாளியின் மேல் ஆத்திரம். மனதை திடப்படுத்திக்கொண்டு ஒரு ஊகத்தில் தேடி சென்றாள். தானொரு கால்நடை மருத்துவர் என்று அறிமுகபடுத்திகொண்டு மாநகராட்சி கட்டிடம் உள்ளே கயலை பார்த்த போது கையலுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை மறுமுறை செய்திருந்தார்கள். அஞ்சு விடுதியில் கயலை வைத்திருந்தபோதே ஒருமுறை மாணவர்கள் சேர்ந்து கருத்தடை அறுவை சிகிச்சை செய்திருந்தார்கள். அடையாளத்திற்கு காதில் சிறிதாக வெட்டி இருப்பார்கள். அதை மறந்துவிட்ட தவறை அப்போதுதான் உணர்ந்தாள். கயல் மாநகராட்சியினுள் மற்ற நாய்களுடன் இருந்தாதால் காயம் ஆறாமல் உயிருக்கு போராடியது.
அதனுடனே அன்றிரவு சாப்பிடாமல் மறுநாள் காலையும் கயலை மருத்துவமணையில் காண்பித்து வரும்வரை அழுதுகொண்டே இருந்தாள். கயல் தேறி வருகிறது.
அஞ்சு குழந்தையிலேயே இப்படி கால்நடை மருத்துவர் ஆக முடிவெடுத்துவிட்டாள். மனிதர்களிடம் மருத்துவம் செய்வதையும்விட விலங்குகளுக்கு விருப்பத்துடன் மருத்துவம் செய்வது அரிது. அதுவும் வெளிநாட்டிலிருந்து லாப்ரடார் போன்ற வகையை இறக்குமதி செய்யும் பலரில் தெருவிலிருக்கும் நாய்களை குழந்தைகளைபோல் பார்க்கும் அஞ்சனா தனிதான்......
I am lucky to see Dr. Ramamurthy of mayiladuthurai who do not prescribe medicines for fevers, viruses. Living Legend..
டாக்டர்கள் தினம் முடிந்து ஒரு வாரம் ஆகையில் முடிகொண்டானிலிருந்து வந்து மயிலாடுதுறைக்கு மகுடம் சூட்டிய மருத்துவர் ராமமூர்த்தி Dr.V.Ramamurthi அவர்களை எதேர்ச்சையாக காலை வாக்கிங் போது சந்திக்க நேர்ந்தது. ஒரு வேஷ்டி மற்றும் தோளில் துண்டு என்று இதுதான் இந்த வாத்திமா வகுப்பை சேர்ந்த அருமையான எளிய மனிதரின் தோற்றம். என் மனைவி 2 ரூபா டாக்டர் என்று இவரை சொல்லக்கேட்டிருக்கிறேன். உடம்பு சரியில்லை என்று போனால் 'ஏண்டிம்மா குழந்தை நன்னா இருக்கியோன்னோ, நன்னா இருந்தா ஏண்டிம்மா இங்க வர்ற..' என்று தன பேத்தியையோ மகளையோ போலதான் அழைப்பார். தற்போதுதான் முதல் முறையாக நேரில் பார்த்தேன். இப்போது பத்து ரூபாய், ஏழைகள் என்றால் அதுவும் வாங்குவதில்லை. 
புனிதமான மருத்துவத் தொழில் மயிலாடுதுறையில் ராமமூர்த்தி டாக்டரால் புனிதம் பெற்றது அருகாமையிலுள்ள கிராமப்புறங்களில் இருந்தெல்லாம் மக்கள் அவரிடம் வருவார்கள். அவர் பரிந்துரைக்கும் மருந்து கூட மிகக் கம்மியான விலை கொண்டதாகத்தான் இருக்கும். அரசு மருத்துவமனையில் கௌரவ டாக்டராக (அதாவது சம்பளம் வாங்கமல் உழைப்பது-அப்போது அது நடைமுறையில் இருந்தது, இப்போது இல்லை) இருந்து கொண்டே ஒரு கிளினிக் ஆரம்பித்து ஏழைகளுக்கு முடிந்த வரை இலவசமாக பணி செய்து தனக்கு வரும் சாம்பிள் மாத்திரைகளை அவர்களுக்கு கொடுத்து அப்பப்பா அவரின் குணம் யாருக்கும் வராது. சாம்பிள் மாத்திரைகளை காசாக்கியும், மெடிகல் ரெப்பிடம் குடும்பத்தோடு வெளி நாட்டிற்கு உல்லாச பயணம் செய்வதற்கும் ஓட்டல்களில் தங்குவதற்கும், லேப்-ல் கட்டிங் கேட்கும் டாக்டர்களின் நடுவே இது மாதிரி ஒரு மருத்துவர். அவரிடம் கற்றுக்கொண்ட சேவை எண்ணத்தை பின்பற்ற ஆசை. மருத்துவர்கள் கிட்டத் தட்ட தெய்வம் போல்தான்.

இவர் எங்கள் குடியிருப்பின் கார்ட்னர். இந்த சொல்லை ஒளிக்கும்போது கடவுள் ஒளிந்திருப்பதால் இதை ஆங்கிலப்படுத்தினேன். குடியிருப்பின் உட்புறம் சுமார் 200க்கும் மேற்பட்ட மரங்கள் செடிகள் கொடிகள் இருக்கும். இவை அனைத்தும் செழிப்புடன் ஆனந்தமாய் தூய்மையுடன் இருப்பதற்க்கு இவர்தான் முழுமுதற்காரணம். குழந்தைகளையும் மக்களையும் மட்டும் காப்பவர் மட்டுமே மருத்துவர் அல்ல. எங்கள் கார்ட்னரும்தான்

ரயில் பயணம் ஒன்று: 

எப்போதும் களிமண் கலரிலேயே பார்திருந்து, முதன் முதலில் வைகை ரயில் வேற்று கலரில் பார்த்தபோது அவ்வளவு ஆனந்தம். பல வருடங்களுக்கு பிறகு சமீபத்தில் திருச்சியை நோக்கி பயணம். முன்பதிவு செய்யப்படாத நிலையில் வைகை விரைவு ரயிலில் இடம் இல்லை. முன்பதிவு செய்யப்படாத பெட்டியில் எப்படியோ சன்னலோரமாக ஒரு இடத்தை பிடித்தாகிவிட்டது. அது ஒரு சிங்கிள் சீட்டர். வண்டியில் கும்பல் நிரம்பி வழிந்த காரணத்தால் காலிலும் இடுக்கிலும் என்னுடன் பயணித்தவர்கள் உட்கார்த்திருந்தனர். பக்கத்து இருக்கையில் ஒரு நான்கு பேர் உட்கார்ந்து இருந்தனர்.

பக்கத்து இருக்கயில் புதிதாக திருமணமான தம்பதிகள் மாலை மற்றும் உடை, நாத்தனார்கள் காட்டிய காசு இவைகளிலிருந்து தெரிந்தது. பெண்ணின் தகப்பனார் ரயில்வே தொழிலாளி என் அப்பாவைப்போல் (படத்தில் உள்ளவர்). தன் பெண்ணிற்கு தனது சட்டை பயிலிருந்து பணத்தை எடுத்துகொடுத்தார். பிறகு பேண்டிலிருந்து பணம் தரப்பட்டது. பெண்ணிற்கு என்ன வேண்டும் என்று கேட்டு ஏதோ உணவு பொருட்கள் வாங்கி வந்தார்.

அந்தப்பெண், ‘அப்பா போரும்’ என்று கூறியும், மறுபடியும் தண்ணி இருக்காம்மா என்று கேட்டுக்கொண்டே தண்ணீர் பாட்டில் வாங்கி வந்தார். திருமணம் செய்து முதல் முறை அனுப்புவது அந்த பதட்டத்தில் பரிதவிப்பில் தெரிந்தது. நான், ‘எங்கே தண்ணி வாங்கி வந்தீங்க. அதிக தூரமா இல்ல கிட்டக்கதானா’ என்றேன்.

இங்கதான் என்று சொல்லி நான் மறுத்தும் கேட்காமலேயே மற்றொரு பாட்டீல் என் கையில். என்னால் அந்த கும்பலில் எல்லோரையும் தாண்டி சென்றிருக்கவும் முடியாது. பச்சை சிக்னலும் போட்டாகிவிட்டது. அவரை அனுப்பிய குற்ற உணர்வுடன் பணத்தை எடுத்து கொடுத்தேன். அவர் பரவால்ல இருக்கட்டும் என்றார். வலுக்கட்டாயமாக திணித்தாலும் இந்த நெகிழ்வான தருணம் முன்பதிவு செய்யப்பட்ட பெட்டியில் கண்டிப்பாக கிடைத்திருக்காது. இந்த மனிதரை மறுபடியும் பார்ப்பேனா என்று அறியேன். ஆனால் மனதில் பதித்து சென்ற நிகழ்ச்சி.
இடையில் ஒரு பெண் வடை மற்றும் சம்ஸா விற்று கொண்டு வர, நாக்கில் எச்சில் வர நான் கட்டிய மனைவி கட்டி அனுப்பிய பாக்ஸை திறந்து உண்ண ஆரம்பித்தேன். மனதில் சம்ஸா மறுபடியும் வருமா என்று நினைத்து கொண்டிருந்த வேளையில் சிறிது நேரம் கழித்து வர இம்முறை பாக்ஸ் மூடப்பட்டது.

வைகை ஓடி வர வசந்தம் பாடி வர மனதில் அசை போட்டுக்கொண்டே நான். தண்டவாளம் கணுக்காலில் இல்லாமல் பாதம் பட்ட காற்ச்சலங்கைபோல் கூடவர ஆடியில் வைகை வற்றினாலும் இவ்வைகை வைகறை கடந்து காவிரி வந்தடைந்தது.

PK Iyengar

வருடம் 1991. எஸ்‌எஸ்‌என் நேவல் அகாடெமி ஆபிசர் நேர்முகத்தேர்விற்கு அழைத்திருந்தார்கள். இன்டர்வியூ பயணச்செலவு திரும்ப பெற்றுக்கொள்ளலாம். புகைவண்டி பிடித்தாயிற்று. சென்ட்ரலில் இருந்து நாக்பூர் வழியாக ஏதோ ஒரு எக்ஸ்பிரஸ், பெயர் ஞாபகமில்லை. தேர்வை எதிர்நோக்கி கையில் அந்த வருட GK புத்தகத்தில் சிந்தனைகளை சிதறவிடாமல் மூழ்கினேன். 

அருகில் ஆங்கிலம் பேசக்கூடிய சிலரிடம் அவ்வப்போது ஊரு பேர் கேட்டுக்கொண்டு சந்திப்புகளில் கிடைக்கும் உணவுகளை உட்கொண்டு உட்கார்ந்திருந்தேன். நாக்பூர் வந்தடைந்ததும் வேறு சிலர் ஏறினர். இங்கு தான் நம் ஹீரோ அறிமுகமானார். சுமார் 50 வயதை கடந்தவர். பெயர் மணி என்பது மட்டும்தான் மனதில் உள்ளது. தமிழா என்று விசாரித்தார். ஆம் என்றும் இந்தியக் கடற்படையில் எஸ்.எஸ்.சி நேர்முகத்தேர்விற்கு வந்தேன் என்றும் கூறினேன். அதற்குள் என்னுடன் மற்றொருவரும் சேர்ந்து கொண்டார். எங்களை பெட்டி படுக்கயை பார்த்து, அடப்பாவி சுரேஷ், இங்க குளிர் அதிகம், ஆனால் நீ வேஷ்டியை போத்திக்கொள்வேன் என்கிறாய். பேசாமல் என்னுடன் வா. என் வீட்டில் நல்ல டூவேட் மற்றும் கம்போர்ட்டெர்ஸ் இருக்கிறது, எடுத்து செல் என்றார்.

நான் முன் பின் தெரியாதவரை எப்படி தொடர்வது என்று மனதில் பல எண்ணங்கள் தோன்றினாலும் நாளை காலை அங்கு 7 மணிக்கு சரியாக அகாடெமியில் இருக்க வேண்டும் என்று சொல்லி விடை பெற்றேன். இந்த இன்டர்வியூ பிராசஸ் ஒரு அருமையான அனுபவம். ஒரு வாரமே பேதமில்லாமல் பல மாநிலத்தவருடன் பழகும் அறிய வாய்ப்பு கிட்டும். எல்லோரும் பல வருடங்கள் பழகியது போல் நட்பு பாராட்டுவோம். Entrance exam, individual task, half group task, full group task, interview, breaks, food என்று அதற்கு தனி பத்தி எழுத வேண்டும். இவைகள் அனைத்திலும் மிளிர கடினமாக தோன்றவில்லை.

ஒருவாரம் கழித்து தேர்வு முடிந்தவுடன் ஓர் மன தையிரியத்தை வரவழைத்து மணி அவர்களை தொலைபேசியில் கூப்பிட்டேன். நான் கிளம்பறேன் சார் என்றேன். இல்ல இல்ல நீ வீட்டுக்கு வந்துதான் போகவேண்டும் என்று ஆர்‌பி‌ஐ (சார் இம்லி) காலனிக்கு ஆட்டோ பிடித்து வருமாறு அழைத்தார். வார விடுமுறை நாள் ஆதலால் பிட்டன் மார்க்கெட் எல்லாம் சென்றோம். இன்னும் இரண்டு நாள் மேலும் தங்குமாறு வற்புறுத்தினார்.

சகல வசதிகளுடன் தனி ரூம், எல்லாம் விலயுயர்ந்த பொருட்கள். பெரிய பெண் அமெரிக்காவில் ஐ‌பி‌எம் மாப்பிள்ளைக்கு வாக்கப்பட்டு சென்று விட்டார். சிறிய பெண் காலேஜில் படித்து கொண்டிருக்கிறார். அம்மாவும் பெண்ணும் கேரளாவில் உள்ளனர் என்று புகைப்படங்களை காண்பித்தார்.

அன்று பணிப்பெண் வந்து அவருக்கு வைத்திருந்த உணவை மறந்து சென்று விட்டதால் நான் ஓடோடி சென்று அழைத்து வந்ததை கண்டு, ‘பார்த்தாயா சுரேஷ், உன் வீடு போல் உனக்கு பொறுப்பு வந்துவிட்டது’ என்றார். மறுநாள் சாவியை கொடுத்துவிட்டு நான் மாலை வருகிறேன் என்று சென்று விட்டார். நம்ப முடியாதுதான். ஆனால் அத்தனையும் சத்தியமான வாக்கு. நான் உதவி செய்ய நினைத்து அரிசி வைக்கலாம் என்று குக்கரில் தண்ணீர் வைக்காமல் அரிசிக்கு மட்டும் 1:3 வீதம் தண்ணீர் வைத்து, ப்ரெஷரில் மூடி பறந்து அரிசி தீய்ந்து பாத்திரம் கருகி அவர் வரும்வரை கன்னத்தில் கை வைத்து உட்கார்ந்திருந்தேன்.

அழைப்பு மணி அடிக்கவும் என் பீட்டும் எகிறியது. திறந்தேன், சுரேஷ், பி‌கே ஐயங்காரிடமிருந்து என் சின்ன பெண்ணுக்கு வரன் கேட்டு கடிதம் வந்திருக்கிறது. இதுக்கென்னடா இவ்வளவு எக்ஸ்ஐட் ஆகிறார் என்று பார்த்தேன். அடப்பாவி, அவர் யாரென்றே தெரியாதா. செர்மேன் ஆஃப் அடாமிக் ரிசர்ச் அண்ட் கமிஷன் என்றார். ஓகே ஜி‌கே புக்ல பி‌கே இல்லை டி‌கே என்று சொல்லி கேக்கே பிக்கே ன்னு விழித்து அடுத்து அரிசி கதையை ஆரம்பித்தேன். மருபடியும் திட்டு. என் மனைவி வந்து கேட்டால் நான் என்ன சொல்வது. யார் பெற்ற பிள்ளயோ. உன் தாயிடம் நான் என்ன சொல்வேன் என்றாரே தவிர குக்கரை பற்றி அணு அளவும் கவலைப்படவில்லை. அவருக்கு அணு சம்பந்தப்பட்ட சம்பந்தம் அமைய பிரார்த்திதேன்.

மணி ஐயங்கார் மனிதருள் மாணிக்கம். பல முகமறியா மக்களுக்கு உதவியுள்ளார். அவர் எங்கு உள்ளார் என்று அணுவளவும் செய்தி இல்லை. சின்ன பெண்ணிற்கு அந்த சம்பந்தம் முடிந்ததா என்றும் தெரியாது. அசை போட்டுக்கொண்டே இருபுறமும் வானுயர டால்மேஷியன் படுத்திருப்பது போல் பனிபடர்ந்த மலைகள் நடுவில் சீரிச்செல்லும் வண்டி சக்கரத்தின் ஓசையுடன் வாழ்க்கை சக்கரத்தின் மாற்றங்களை எண்ணி காவிரி நோக்கி பயணித்தேன்.

Sunday, July 8, 2018

அழகே அழகு தேவதை
ஆயிரம் பாவலர் எழுதும் காவியம்


கூந்தல் வண்ணம் மேகம் போல
குளிர்ந்து நின்றது
கொஞ்சுகின்ற செவிகள் ரெண்டும்
கேள்வியானது
பொன்முகம் தாமரை
பூக்களே கண்களோ
மனக்கண்கள் சொல்லும் பொன்னோவியம்

சிப்பி போல இதழ்கள் ரெண்டும்
மின்னுகின்றன
சேர்ந்த பல்லின் வரிசை யாவும் 
முல்லை போன்றன
மூங்கிலே தோள்களோ
தேன்குழல் விரல்களோ
ஒரு அஙகம் கைகள் அறியாதது

பூ உலாவும் கொடியைப் போல 
இடையைக் காண்கிறேன்
போகப் போக வாழை போல 
அழகைக் காண்கிறேன்
மாவிலை பாதமோ
மங்கை நீ வேதமோ
இந்த மண்ணில் இது போல் பெண்ணில்லையே