Tuesday, July 17, 2018

ரயில் பயணம் ஒன்று: 

எப்போதும் களிமண் கலரிலேயே பார்திருந்து, முதன் முதலில் வைகை ரயில் வேற்று கலரில் பார்த்தபோது அவ்வளவு ஆனந்தம். பல வருடங்களுக்கு பிறகு சமீபத்தில் திருச்சியை நோக்கி பயணம். முன்பதிவு செய்யப்படாத நிலையில் வைகை விரைவு ரயிலில் இடம் இல்லை. முன்பதிவு செய்யப்படாத பெட்டியில் எப்படியோ சன்னலோரமாக ஒரு இடத்தை பிடித்தாகிவிட்டது. அது ஒரு சிங்கிள் சீட்டர். வண்டியில் கும்பல் நிரம்பி வழிந்த காரணத்தால் காலிலும் இடுக்கிலும் என்னுடன் பயணித்தவர்கள் உட்கார்த்திருந்தனர். பக்கத்து இருக்கையில் ஒரு நான்கு பேர் உட்கார்ந்து இருந்தனர்.

பக்கத்து இருக்கயில் புதிதாக திருமணமான தம்பதிகள் மாலை மற்றும் உடை, நாத்தனார்கள் காட்டிய காசு இவைகளிலிருந்து தெரிந்தது. பெண்ணின் தகப்பனார் ரயில்வே தொழிலாளி என் அப்பாவைப்போல் (படத்தில் உள்ளவர்). தன் பெண்ணிற்கு தனது சட்டை பயிலிருந்து பணத்தை எடுத்துகொடுத்தார். பிறகு பேண்டிலிருந்து பணம் தரப்பட்டது. பெண்ணிற்கு என்ன வேண்டும் என்று கேட்டு ஏதோ உணவு பொருட்கள் வாங்கி வந்தார்.

அந்தப்பெண், ‘அப்பா போரும்’ என்று கூறியும், மறுபடியும் தண்ணி இருக்காம்மா என்று கேட்டுக்கொண்டே தண்ணீர் பாட்டில் வாங்கி வந்தார். திருமணம் செய்து முதல் முறை அனுப்புவது அந்த பதட்டத்தில் பரிதவிப்பில் தெரிந்தது. நான், ‘எங்கே தண்ணி வாங்கி வந்தீங்க. அதிக தூரமா இல்ல கிட்டக்கதானா’ என்றேன்.

இங்கதான் என்று சொல்லி நான் மறுத்தும் கேட்காமலேயே மற்றொரு பாட்டீல் என் கையில். என்னால் அந்த கும்பலில் எல்லோரையும் தாண்டி சென்றிருக்கவும் முடியாது. பச்சை சிக்னலும் போட்டாகிவிட்டது. அவரை அனுப்பிய குற்ற உணர்வுடன் பணத்தை எடுத்து கொடுத்தேன். அவர் பரவால்ல இருக்கட்டும் என்றார். வலுக்கட்டாயமாக திணித்தாலும் இந்த நெகிழ்வான தருணம் முன்பதிவு செய்யப்பட்ட பெட்டியில் கண்டிப்பாக கிடைத்திருக்காது. இந்த மனிதரை மறுபடியும் பார்ப்பேனா என்று அறியேன். ஆனால் மனதில் பதித்து சென்ற நிகழ்ச்சி.
இடையில் ஒரு பெண் வடை மற்றும் சம்ஸா விற்று கொண்டு வர, நாக்கில் எச்சில் வர நான் கட்டிய மனைவி கட்டி அனுப்பிய பாக்ஸை திறந்து உண்ண ஆரம்பித்தேன். மனதில் சம்ஸா மறுபடியும் வருமா என்று நினைத்து கொண்டிருந்த வேளையில் சிறிது நேரம் கழித்து வர இம்முறை பாக்ஸ் மூடப்பட்டது.

வைகை ஓடி வர வசந்தம் பாடி வர மனதில் அசை போட்டுக்கொண்டே நான். தண்டவாளம் கணுக்காலில் இல்லாமல் பாதம் பட்ட காற்ச்சலங்கைபோல் கூடவர ஆடியில் வைகை வற்றினாலும் இவ்வைகை வைகறை கடந்து காவிரி வந்தடைந்தது.

No comments:

Post a Comment